தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தலைமைத் தேர்தல் ஆணையம்

2 mins read
b9cb6a6d-436b-4e6e-8e13-6ca5a504f568
நீக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தற்போது 6 தேசியக் கட்சிகளும் 67 மாநிலக் கட்சிகளும் உள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 334 அரசியல் கட்சிகளை தனது பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது. அவற்றுள் 22 அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டவை.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரை இக்கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இக்குறிப்பிட்ட 334 கட்சிகளுக்கும் நாட்டின் எந்த இடத்திலும் அதிகாரபூர்வ அலுவலகங்களும் இல்லை என ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

நீக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தற்போது 6 தேசியக் கட்சிகளும் 67 மாநிலக் கட்சிகளும் உள்ளன.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், தேர்தல் ஆணையம் இதுபோன்ற 345 கட்சிகள் மீது நடவடிக்கைகளைத் தொடங்கி, இறுதியாக 334 கட்சிகள், பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன.

1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு ‘29ஏ‘ விதிகளின் கீழ் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு பதிவு செய்யப்படும் கட்சிகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும். எனினும் தேர்தலில் போட்டியிடாமலேயே, தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்ற அடிப்படையில் சில தரப்பினர் பல சலுகைகளைப் பெற்று வந்தனர்.

இதையடுத்தே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கட்சிகள், இந்த உத்தரவை எதிர்த்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும்.

இந்த நடவடிக்கையின் மூலம்,தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் எண்ணிக்கை 2,854ல் இருந்து 2,520ஆகக் குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்