புதுடெல்லி: அரசியலமைப்பு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், அறிவுப்பூர்வமாகச் செயல்படவும், குற்றச்சாட்டுகளுக்கு அடிபணியாமல் இருக்கவும் முடிவு செய்திருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையத்தை அண்மையில் குற்றஞ்சாட்டி இருந்தார்.
“தேர்தல் நடத்தை விதிகளைப் பாஜக மீறுவதாகக் கூறப்படுவதை தேர்தல் ஆணையம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஓய்வுக்குப் பிறகான அரசுப் பணியைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தின் நடப்புத் தலைமை ஆணையர் ராஜீவ் குமார், பாஜக மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்,” என்பதே கெஜ்ரிவால் முன்வைத்த குற்றச்சாட்டாகும்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் வரும் 18ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. எக்ஸ் பக்கத்தில் இடம்பெற்றுள்ள அதன் பதிவில், டெல்லி தேர்தலையொட்டி இந்தியத் தேர்தல் ஆணையத்தை அவதூறு செய்ய வேண்டுமென்ற நோக்கிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் செயல்கள் நடைபெறுவதை மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம் கூட்டாகக் கவனித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் என்பதை ஒரு நபர் அமைப்பு போல கருதிக் கொண்டு இத்தகைய செயல்கள் நடந்துள்ளதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லி பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் ஜனவரி 3ஆம் தேதி முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியிடம் சரணடைந்துவிட்டதாக விமர்சித்து இருந்தார்.
மேலும், இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இல்லாதது போல தோன்றுகிறது என்றும் இது மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.