புதுடெல்லி: வாக்குத் திருட்டுச் சம்பவங்களின்போது இந்தியத் தேர்தல் ஆணையம் நன்கு விழித்திருந்தது என்றும் நடந்த வாக்குத் திருட்டைப் பார்த்துக்கொண்டே இருந்தது என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வியாழக்கிழமை (செப்டம்பர் 18) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இந்நிலையில், அந்தச் சந்திப்பின் ஒரு பகுதி காணொளியை வெள்ளிக்கிழமை தமது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், வாக்குத் திருடர்களின் பாதுகாவலராகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை இணையம் வழி நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருவதாக அவர் பகிரங்கமாகச் சாடினார்.
‘வாக்குத் திருட்டு 2.0’ குற்றச்சாட்டைத் தாம் தொடர்ந்து வலியுறுத்த அந்தக் கும்பலின் செயல்பாடுதான் காரணம் என்று ராகுல் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“வாக்குத்திருட்டு நடப்பதற்கு முன்பு, தேர்தல் ஆணையம் ஒரு பாதுகாவலர்போல் (வாட்ச்மேன்) காத்திருந்தது. ‘காலை 4 மணிக்கு எழுந்திருங்கள், 36 வினாடிகளில் 2 வாக்காளர்களை நீக்குங்கள், பின்னர் மீண்டும் தூங்கச் செல்லுங்கள்’ என்று சொல்லும் வகையில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது. தேர்தல் ஆணையமும் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தது,” என ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.