தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

2 mins read
43a488d9-cb31-4a42-8dfc-b33bdcc362f8
இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் அரசியல் சாசனம் வாக்குரிமை வழங்கியுள்ளது என்றும் அந்த உணர்வுபூர்வமான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். - சித்திரிப்புப்படம்: தினமணி

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் வழக்கம்போல் தேர்தல் களத்தில் விறுவிறுப்பும் பரபரப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்குத் (எஸ்ஐஆர்) தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

திருத்த நடவடிக்கைக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து மால்டா மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் சிலர் அண்மையில் சில மணிநேரம் சிறைபிடிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ள நிலையில், விரைவில் நடைபெறவுள்ள மேற்கு வங்கத் தேர்தலில், 34 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியற்றவர்கள் என உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 13) தீர்ப்பளித்தது.

இதற்கு முதல்வர் மம்தா, மேற்கு வங்க அரசுத்தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வாதங்களைச் செவிமடுத்த நீதிபதிகள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இடைக்காலமாக வாக்குரிமை அளிக்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான உரிமையை யாருக்கும் மறுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியது.

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் அரசியல் சாசனம் வாக்குரிமை வழங்கியுள்ளது என்றும் அந்த உணர்வுபூர்வமான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

“தேர்தல் காலம் என்பதால் அவசரக் கோலத்தில் கண்மூடித்தனமாக அந்த உரிமையை நாம் புறக்கணித்துவிடக் கூடாது. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இத்தகைய திடீர் நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஒருதலைப்பட்சமான, அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் தேங்கிக்கிடப்பது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் முன்வைக்கும் குறைகளைத் தீர்க்க வலுவான மேல்முறையீட்டு நடைமுறை நமக்குத் தேவைப்படுகிறது என்றனர்.

“பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது ஒரு நிலைப்பாடு, இப்போது வேறு நிலைப்பாடு என இந்தியத் தேர்தல் ஆணையம் பாரபட்சமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது,” என்றும் நீதிபதிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்