தேர்தல் ஆணையத்தின் தீய நோக்கம்: சாடும் பினராயி விஜயன்

2 mins read
952dc4c1-7825-4ca7-819c-fc967a9e8893
முதல்வர் பினராயி விஜயன். - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக கேரள மாநிலச் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் உள்ளது எனச் சந்தேகிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் அண்மையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6.5 மில்லியன் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் இருப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலின்போது பல்வேறு மோசடிகள் நடப்பதாகவும் அவர் பகிரங்கமாகச் சாடினார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத் தலைமையகம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

இந்நிலையில், கேரளச் சட்டப்பேரவையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் அவசர நடவடிக்கைகள் காரணமாக, அதன் நோக்கத்தின் மீது சந்தேகம் எழுகிறது என்றார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையானது, தேசிய குடிமக்கள் பதிவேட்டைச் செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சி என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானோரின் பெயர்கள் எந்தவிதக் காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டன. எனவே, இந்திய அளவில் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

“இந்த நடவடிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களில் அதே நடவடிக்கையை மேற்கொள்வது ஏன்,” என்று முதல்வர் பினராயி ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்