பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி

2 mins read
8626099d-fd20-4ea2-b421-00f67ed2f118
இந்த ஆண்டு இறுதிக்குள் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர்கள் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை சனிக்கிழமையுடன் (ஜூலை 26) முடிவுக்கு வந்தன.

மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக, 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புள்ளி விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அண்மைய திருத்தப் பணிகளின்போது 22 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும், 35 லட்சம் வாக்காளர்கள் அம்மாநிலத்தை விட்டு நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர்.

7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1.2 லட்சம் பேர் இன்னமும் தங்களது விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

பீகாரில் மொத்தம் 7.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7.23 கோடி வாக்காளர்களின் விவரங்கள் மின்னிலக்கமயம் ஆக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, இறுதி நடவடிக்கையாக வரைவு வாக்காளர்கள் பட்டியல், ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், தங்கள் பெயரைச் சேர்க்கலாம் என்றும் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவது தொடர்பாக கட்சிகள் தங்களின் எதிர்ப்பைத் தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பீகாரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு எதிராக வாக்களிப்பவர்களின் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி சாதகமான சூழலை ஏற்படுத்த பாஜ முயற்சி செய்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், பீகாரில் நடப்பது சீர்திருத்தம் அல்ல, தில்லுமுல்லு என்றும் நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு திரு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பீகார் மாநிலத்தில் நடந்தது அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்