தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை; சமாஜ்வாடிக்கு ஆதரவு

2 mins read
a052d9f0-35bc-45b3-b16b-f42415789e53
அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி. - படம்: பிடிஐ

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை இரவு அறிவித்தார்.

காங்கிரசுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி சமாஜ்வாதிக்கு முழு ஆதரவை வழங்குவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மில்கிபூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றன.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 43 தொகுதிகளைக் கைப்பற்றினாலும் சமாஜ்வாதி 37 இடங்களிலும் காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வென்றன.

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகள் கேட்ட நிலையில், காசியாபாத் மற்றும் கைர் தொகுதிகளை மட்டுமே கொடுப்பதற்கு சமாஜ்வாதி முன்வந்தது.

மேலும், சமாஜ்வாடி போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அகிலேஷ் யாதவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதற்குப் பதிலாக, இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்