தேர்தலில் படுதோல்வி; பதவி விலகினார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

தேர்தலில் படுதோல்வி; பதவி விலகினார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

படம்: ஆன்லைன் மனோரமா

05 May 2026 - 5:14 pm

2 mins read

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகினார்.

அதன் தொடர்பில், முதல்வர் அலுவலகம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்குக் கடிதம் அனுப்பியது. முதல்வரின் பதவி விலகலை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.

அதே நேரத்தில், புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும்வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு திரு பினராயி விஜயனை அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இடதுசாரி முன்னணி, மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 35 தொகுதிகளில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடித்தது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தர்மடம் தொகுதியில் 50,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற முதல்வர் பினராயி விஜயனும் இம்முறை தட்டுத் தடுமாறியே வென்றார்.

வாக்கு எண்ணிக்கையில் ஆறாவது சுற்றுவரை பின்தங்கியிருந்த அவரால், ஏழாவது சுற்றில்தான் முன்னிலை பெற முடிந்தது. காங்கிரஸ் கூட்டணியின் அப்துல் ரஷீத் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

பெரும்பாலும் நடப்பு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் இடதுசாரி முன்னணி வாய்ப்பளித்த நிலையில், அவர்களில் பலரும் தங்களுக்கு ஆதரவான தொகுதிகளிலேயே தோல்வியைத் தழுவினர்.

மாறாக, மலப்புரம், இடுக்கி, வயநாடு, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களை ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒட்டுமொத்தமாக அள்ளியது.

தோல்வியை அடுத்து அறிக்கை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலக் குழு, “கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் கட்சி குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. இருப்பினும், வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது. இதற்கு வழக்கமான காரணங்களைக் கூறுவதை விடுத்து, கட்சி தன்னாய்வு செய்ய வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளது.

‘சிபிஎம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’

இதனிடையே, ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றியிலிருந்து சிபிஎம் இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.

“ஓர் அரசியல் கட்சியில் செய்யக்கூடாததை, ஓர் அரசாங்கம் செய்யக்கூடாததை எல்லாம் அவர்கள் இந்தப் பத்தாண்டுகளில் செய்தனர். சிபிஎம் தனது பாதை தவறு என்பதை உணர்ந்து, தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

தேர்தல் முடிவுகள் இனவாத அரசியலை மக்கள் புறக்கணித்திருப்பதைக் காட்டுகின்றன என்றும் திரு வேணுகோபால் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்