புதுடெல்லி: இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக, நியாயமாக நடப்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 8ஆம் தேதி இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
21 அரசியல் கட்சிகள் பங்கேற்ற அக்கூட்டத்தின் முடிவில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த சட்டம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு கூட்டுக் கடிதம் அனுப்புவதென முடிவானது.
அதன்படி, இண்டியா கூட்டணி சார்பாகத் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், பிரதமர் தலைமையிலான ஆட்சியில் தேர்தல் ஜனநாயகம் மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதன் நேர்மையை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல்கள் நேர்மையாக, நியாயமாக நடப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர்களின் வரம்பு மீறிய நடவடிக்கைகளில் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நீதித்துறையின் கடமை எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசமைப்புச் சட்டக் கட்டமைப்பை அழிப்பதில் குறியாக இருக்கும் ஆட்சியாளர்களிடம் இருந்து அதைப் பாதுகாப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
அநீதி மேலோங்காமல் பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் தார்மீகப் பொறுப்பு என்றும் அதைச் செய்யாமல் போனால் 140 கோடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தடுக்க முடியாது என்றும் திரு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
“வெளிப்படைத்தன்மையை நிறுவும் பொருட்டே நாங்கள் இந்தக் கடிதத்தைப் பொதுவெளியில் வெளியிடுகிறோம்.
“மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்,” என்று திரு வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.
“அதன்மூலம் நாட்டின் கோடிக்கான வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் கொண்ட நம்பிக்கையையும் மீட்டெடுக்க முடியும் என நம்புகிறோம்,” என்று திரு வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

