புதுடெல்லி: எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ.12,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
உலகின் ஆகச் சிறந்த தலைநகரங்களில் ஒன்றாக புதுடெல்லியை மாற்ற டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் சாஹிபாபாத் வரை இயக்கப்படும் நமோ பாரத் விரைவு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.
மேலும், ரூ.12,200 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், நாட்டில் மெட்ரோ ரயில் சேவை 1,000 கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவதாகவும் உலகின் ஆகப்பெரிய மெட்ரோ ரயில் வசதி கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பேரழிவு சக்தியாக செயல்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி இப்போது முழுமையான ஊழல் கட்சியாக மாறிவிட்டதாக விமர்சித்தார்.
“ஆம் ஆத்மி தலைவர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுபான உரிமம் ஊழல், பள்ளி ஊழல், மருத்துவமனை எனப் பல்வேறு ஊழல் விவகாரங்கள் பூதாகரமாக வெடித்துள்ளன.
“டெல்லி மக்களால் காற்று மாசு காரணமாக சுத்தமான காற்றைக்கூட சுவாசிக்க முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி முழுவதும் பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“இனிமேலும் இவற்றை சகித்துக்கொள்ள மாட்டோம் எனப் பொதுமக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மத்திய அரசின் நலத்திட்டங்களை ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது,” என்று பிரதமர் மோடி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லி ரோகினி பூங்கா பகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உரையாற்றினார்.