சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் வியாழக்கிழமையுடன் (டிசம்பர் 11) நிறைவுபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற இந்தச் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கின.
இம்மாதம் 4ஆம் தேதி முடிய இருந்த நிலையில், டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது..
எஸ்ஐஆருக்கான கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, அவற்றைத் திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் நாளையுடன் (டிசம்பர் 11) முடிவடைகின்றன.

