சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்

2 mins read
d2d422f9-72b0-408c-b301-f1bf95e8fc91
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரண்டு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. - படம: தந்தி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் சிறப்புத் தீவிர மறுஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதை முன்னிட்டு கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து வாக்கு நிலைய அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கினர்.

இம்மாதம் 4ஆம் தேதிக்குள் பொதுமக்கள் அந்த விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்து திருப்பி அனுப்பும்படி கூறப்பட்டது. அதையடுத்து விண்ணப்பப் படிவங்களைத் திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் இம்மாதம் முதலில் 11ஆம் தேதிவரை என்றும் பின்னர் 14ஆம் தேதிவரை என்றும் நீட்டிக்கப்பட்டது.

அதையடுத்து இம்மாதம் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க அதிகாரிகள் சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதிவரை வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பட்டியலில் சேர்ப்பதுடன் விவரங்களில் திருத்தங்களையும் செய்து அதுகுறித்த மறுப்பையும் முன்வைக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விரும்புவோர் படிவம் 6 என்ற சிறப்பு படிவத்துடன் உறுதிமொழிப் படிவத்தையும் பூர்த்திசெய்யவேண்டும்.

அந்த உறுதிமொழிப் படிவம் சிறப்புத் தீவிர மறுஆய்வுப் பணிக்காகக் கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தைப் போல இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதில் 2002ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற தங்கள் பெயரையோ பெற்றோரின் விவரங்களையோ மக்கள் பூர்த்திசெய்து தரவேண்டும்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனிக்கிழமை (டிசம்பர் 20), ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) ஆகிய நாள்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்