புதுடெல்லி: பீகாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், டெல்லியிலும் திருத்தப் பணி தொடங்கியுள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் மிகவும் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் திருத்தப்பட்டு, புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறியது.
டெல்லி திருத்தப்பணிக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், செயல்முறைக்கான அடிப்படை பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கும் டெல்லியில் அடுத்த தேர்தலுக்கு முன்னதாகப் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அக்டோபரில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2003க்குப் பிறகு வாக்காளர் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்பட்டு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது.
தேர்தல் ஆணையத்தின் அந்த முதல் பெரிய நடவடிக்கையின் மீது பல்வேறு கேள்விகள் எழுந்தன. இது மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு திருத்தத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த இறுதி வாதங்கள் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மல்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
டெல்லியிலும் சர்ச்சைகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தற்போது சட்டமன்றத் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் முன்கூட்டியே தயாராக இருப்பது முக்கியம் எனத் தேர்தல் ஆணையம் கருதுகிறது.

