புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையம், 17 மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் 2027 ஜனவரி 1ஐ தகுதித் தேதியாகக் கொண்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் தேர்தல் ஆணையம் தனது சிறப்பு தீவிரத் திருத்தத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
எஸ்எஸ்ஆர் முறை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பது, பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களைக் கண்டறிவது, பிழைகளைத் திருத்துவது, இரட்டைப் பதிவுகள், காலமானவர்கள், நிரந்தரமாக இடம் மாறிய வாக்காளர்களைக் கண்டறிவது போன்ற திருத்தத்திற்கு முந்தைய சரிபார்ப்புப் பணிகள் அடங்கும்.
வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 15) தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடவும், கோரிக்கைகள், ஆட்சேபனைகளைக் கோரி, அவற்றை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவும் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது.
தற்போதைய திருத்தப் பணிக்கு, வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, வெளிநாட்டு வாக்காளர்களுக்குப் படிவம் 6A, ஆட்சேபனை அல்லது பெயர் நீக்கத்திற்கு படிவம் 7 மற்றும் முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் பிற குறிப்பிட்ட மாற்றங்களுக்குப் படிவம் 8 ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
