புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஒன்றுக்கொன்று தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் விதி மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
மராட்டிய மொழித் தொலைக்காட்சித் தொடர்களில் மகாயுதி பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் வைக்கப்படுவதாகவும், நாடகத்தில் குறிப்பிட்ட காட்சிக்குப் பிறகு சிவசேனாவின் பிரசார விளம்பரங்களை மராட்டிய தொலைக்காட்சி ஒளிவழி ஒன்று ஒளிபரப்பி வருவது குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, அந்தப் புகார்கள் குறித்து உடனடியாக விளக்கம் தரவேண்டும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

