தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள்தொகையைவிட அதிக வாக்காளர்கள்: ராகுல் கேள்வி

2 mins read
38115ed4-da43-4789-be0d-347e7de422d3
இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ரெளத் (இடம்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) செய்தியாளர்களைச் சந்தித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள்தொகையைவிட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் 2024ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

அந்தத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ரெளத், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

“கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலுக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குமத இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட ஐந்து மாதங்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

“புதிதாகச் சேர்க்கப்பட்ட இந்த வாக்காளர்கள் யார்? இந்த எண்ணிக்கை இமாச்சலப் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு சமம். மகாராஷ்டிரத்தில் வாக்குச் செலுத்தும் வயதுடைய மொத்த மக்கள் தொகையைவிட வாக்களித்தோரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது,” என்று ராகுல் பேசினார்.

“நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் எங்களுக்குத் தேவை, அவர்களின் பெயரும் முகவரியும் தேவை. புதிய வாக்காளர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

“பல வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், பலரது வாக்குச்சாவடி மாற்றப்பட்டுள்ளது. இவர்களில் தலித், பழங்குடி, சிறுபான்மை சமூகத்தினரே அதிகம்.

“தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் பதில் இல்லை. அதற்கு ஒரே காரணம், அவர்களின் செயலில் தவறு இருப்பதுதான். குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. தரவுகளைத் தெளிவாக வழங்குகிறோம்,” என்றார் ராகுல்.

ராகுலின் குற்றச்சாட்டை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்துள்ளார்.

“தேர்தல் ஆணையம் ஏற்கெனவே திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. ராகுல் தொடர்ந்து பொய்களைக் கூறி, தன்னை ஆறுதல்படுத்திக்கொள்கிறார். இது தொடர்ந்தால், காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற வாய்ப்பில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்