புதுடெல்லி: டெல்லி அரசாங்கம் தனது பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிதாக 100 மின்சாரப் பேருந்துகளை இணைத்துள்ளது. இதன் மூலம், டெல்லியில் இயக்கப்படும் மொத்த மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 5,400ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஹாப்பூர் நகரையும் தலைநகரையும் இணைக்கும் மின்சாரப் பேருந்துச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
காற்று மாசு குறித்த கவலைகள் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், தூய்மையான பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளைத் தலைநகர் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தப் பத்தாண்டின் பிற்பகுதிக்குள், அதாவது 2028ஆம் ஆண்டு இறுதிக்குள் டெல்லியின் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் அனைத்தையும் மின்சாரப் பேருந்துகளாக மாற்ற முதலமைச்சர் ரேகா குப்தா இலக்கு நிர்ணயித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவையைத் திருவாட்டி குப்தா தொடங்கிவைத்தார்.
இந்தப் புதிய பேருந்துகளையும் சேர்த்து, தலைநகரில் தற்போது மொத்தம் 7,088 பேருந்துகள் உள்ளன. அவற்றில் சுமார் 5,400 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகள் என்றும், இந்திய மாநிலங்களிலேயே இதுதான் மிகப்பெரிய மின்சாரப் பேருந்துத் தொகுப்பு என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தொடக்க விழாவில் பேசிய திருவாட்டி குப்தா, புதிய பேருந்துகள் பொதுப் போக்குவரத்து வசதி, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் என்றார்.
“டெல்லியின் போக்குவரத்து அமைப்பில் இன்று நாம் இணைத்துள்ள 100 பேருந்துகள், டெல்லி மக்களின் போக்குவரத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பிற்கும் நமது டெல்லியின் சுற்றுச்சூழலுக்கும் மேலும் சிறப்பாகப் பங்காற்றும்,” என்று அவர் கூறினார்.
பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும் தூய்மையான போக்குவரத்தை ஊக்குவிக்கவும் கடந்த 21 மாதங்களாகத் தனது மின்சாரப் பேருந்து வலையமைப்பை அரசாங்கம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்றுவருவதாகத் திருவாட்டி குப்தா தெரிவித்தார். பயன்பாட்டுக் காலம் முடிவடையும் அரசு வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்கள் மாற்றப்படுகின்றன. மேலும், சாலைகளைத் தூய்மைப்படுத்தும் இயந்திரங்களும் மின்சார வாகனங்களாகப் படையில் இணைக்கப்பட்டு வருகின்றன.
