புதுடெல்லி: மின்னணு உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின்கீழ் (ECMS), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு ஏற்கெனவே இருமுறை ரூ.12,704 கோடி முதலீட்டில் 24 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும் 22 உற்பத்தித் திட்டங்களுக்கு அந்த அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) ஒப்புதல் அளித்தது. அந்தத் திட்டங்கள் ரூ.41,863 கோடி மதிப்பீட்டிலானவை.
ஐந்து பெருநிறுவனங்கள் இந்த உற்பத்தித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்துலக விநியோகிப்பாளர்களுடன் இந்தியாவின் பெரிய கூட்டு நிறுவனங்களின் கலவை அது. டாடா, ஹிண்டால்கோ, மதர்சன் ஆகியன இத்திட்டத்தில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்கள்.
ஆப்பிள் நிறுவனத்துக்கும் விரிவான உலக விநியோகத் தொடருக்கும் முக்கியமான பாகங்களைத் தயாரித்து வழங்க அந்நிறுவனங்கள் ரூ.30,537 கோடியை முதலீடு செய்யும் என்று பிஸ்னெஸ் ஸ்டாண்டர்ட் இணையச் செய்தி தெரிவித்துள்ளது.
மொத்த முதலீட்டுத் தொகையில் இது கிட்டத்தட்ட 75 விழுக்காடு.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட தேவையை மட்டுமே இந்திய நிறுவனங்கள் தற்போது பூர்த்தி செய்து வருகின்றன. குறிப்பாக, டாடா எலெக்ட்ரானிக்ஸ் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள விவரத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக அளவில் இந்தியாவை மின்னணுப் பொருள்கள் உற்பத்தி மையமாக்கும் திட்டத்தின்கீழ் தற்போது மூன்றாவது முறையாக புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் 27,600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன், ரூ.2,58,152 கோடி மதிப்பிலான பொருள்கள் உற்பத்தி இந்தியாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி மூலம் நுட்பமான மின்னணுப் பொருள்களுக்கு உலக நாடுகளைச் சார்ந்திருக்கும் போக்கு இந்தியாவுக்குக் குறையும். உள்நாட்டிலேயே அதிகமாகத் தயாரிக்கப்படும்போது அதுபோன்ற பொருள்களின் இறக்குமதி குறையும்; அதேநேரம் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 22 திட்டங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, ஹரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
அந்த மாநிலங்களில் புதிய உற்பத்தி ஆலைகள் உருவாக்கப்படும். மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலான வளா்ச்சியை இது உறுதி செய்யும்.

