கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மணக்குளங்கரா கோயிலில் திருவிழா பிப்ரவரி 13ஆம் தேதி மாலை நடைபெற்றது. பீதாம்பரன், கோகுல் ஆகிய இரு வளர்ப்பு யானைகள் இத்திருவிழாவில் பங்கேற்றன.
திருவிழாவில் வாணவேடிக்கை, பட்டாசு ஆகியவை வெடிக்கப்பட்டன. இதனால், பதற்றமடைந்த யானைகள் ஒன்றோடு ஒன்று தாக்கிக்கொண்ட நிலையில், மிரண்டு ஓடத் தொடங்கின.
அப்போது யானை மிதித்ததில் ராஜன் என்பவர் உயிரிழந்தார். கோயில் அலுவலகம் பலத்த சேதமடைந்தது. மேலும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குருவங்காடு பகுதியைச் சேர்ந்த லீலா, அம்முக்குட்டி ஆகியோர் மாண்டனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி காவல்துறைக்குக் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் யானை தவறாக கையாளப்பட்டு, சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் கோயில் திருவிழா அனுமதியுடன் நடத்தப்பட்டதாகத் தெரியவந்து உள்ளது.