புதுடெல்லி: பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக முதன்முதலில் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் பாகிஸ்தான் உளவாளிகளைக் களையெடுக்கும் வேலையை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாணவர், பேராசிரியர், வர்த்தகர், மென்பொருளாளர் எனப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாச வேலைகளை அரங்கேற்றுவதற்கு தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் துணை நிற்கிறது என்றும் பணம் கொடுத்து இந்திய ராணுவத்தின் ரகசியத் தகவல்களைப் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பாகிஸ்தானின் உளவுக் கட்டமைப்பைக் கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இதில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி.யில் 11 பேரை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் ஹிசார் நகரைச் சேர்ந்த 33 வயது மல்ஹோத்ரா ஒரு யூடியூப் பிரபலம். இவருக்குப் பாகிஸ்தான் தூதரகத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டில் இவர் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பஞ்சாப், கல்சா கல்லூரியில் தேவேந்திர சிங் தில்லான், 25 வயது, முதுகலைப் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் பயின்று வருகிறார். மே 12ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடந்த 2004ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம், பாட்டியாலா ராணுவம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஹரியானாவின் நூ மாவட்டத்தின் கங்கர்கா சிற்றூரைச் சேர்ந்தவர் முகம்மது டரிப். இவர் சிர்சா விமானப் படைத் தளம் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்துப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து வந்துள்ளார்.
அர்மான், ஹரியானாவின் நூ மாவட்டத்தில் மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது அர்மான் பாகிஸ்தானுடன் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹரியானா மாநிலத்தின் பானிபட் நகரில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நவுமான் இலாகி, நகரில் சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். உ.பி.யை சேர்ந்த இவர், உளவு பார்த்ததற்காகப் பணம் பெற்று வந்துள்ளார்.
உ.பி.யின் ராம்பூரில் வசிக்கும் வர்த்தகர் ஷாஜாத், பலமுறை பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர், மொராதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மென்பொருளாளரான முகம்மது முர்தாசா அலி, தான் உருவாக்கிய செயலி மூலம் இந்தியப் பாதுகாப்புக் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஜலந்தரில் கைது செய்யப்பட்டார்.
இவர்களைத் தவிர பஞ்சாப் மாநிலத்தின் கசாலா என்ற பெண் மற்றும் யாமின் முகம்மது, சுக்பிரீத் சிங், கரன்பீர் சிங் என்ற மூன்று இளைஞர்களை உளவு நடவடிக்கைக்காகக் காவல்துறை கைது செய்துள்ளது.