இந்தியாவின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாட்டின் உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.
அனைத்துலக அளவில் நிலவும் நிலையற்ற சூழலுக்கு இடையே வலுவான பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதில் வரவுசெலவுத் திட்டம் கவனம் செலுத்துகிறது என்றார் திட்டத்தைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதை முன்னிட்டு பகுதி மின்கடத்தி 2.0 திட்டத்தின் வளர்ச்சிக்கு இந்தியா, 40 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மின்னிலக்கக் கூட்டமைப்புக்குள் தன்னிச்சையாகச் செயல்படுகிறது இந்தியப் பகுதிமின்கடத்தி பிரிவு (ஐஎஸ்எம்).
வரவுசெலவுத் திட்டத்தில் ஐஎஸ்எம் 1.0, ஐஎஸ்எம் 2.0 ஆகிய திட்டங்களை திருவாட்டி நிர்மலா அறிமுகப்படுத்தினார்.
மேலும், சரக்கு போக்குவரத்துக்கான புதிய சிறப்பு வழித்தடம் உருவாக்கப்படும் என்றும் 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும் என்றும் திருவாட்டி நிர்மலா கூறினார்.
2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தென்னிந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சென்னைக்கு இரண்டு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை - பெங்களுரு, சென்னை - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மும்பை - புனே, புனே - ஹைதராபாத், ஹைதராபாத் - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரூ, பெங்களூரு - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு இடையே 7 அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும்.
காதி, கைத்தறி, கைவினைப் பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க புதிய திட்டங்களையும் திருவாட்டி நிர்மலா அறிவித்தார்.
பல்வேறு இடங்களில் புதிய மாபெரும் துணிமணிப் பூங்காக்கள் அமைக்கப்படுவதுடன் துணிமணி சார்ந்த திறன்களை மேம்படுத்த தொழில்துறை, கல்வித்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு திட்டமும் கொண்டுவரப்படும் என்றார் திருவாட்டி நிர்மலா.
நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
இந்தியா முழுவதும் ஐந்து மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும் என்ற திருவாட்டி நிர்மலா, தனியார் துறையுடன் இணைந்து மருத்துவ மையங்களும் அமைக்கப்படும் என்றார்.
ஆயுர்வேத மருத்துவத்துக்கு 3 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படுவதுடன் மருத்துவத் துறை சார்ந்த தொழில்நுட்ப கல்வி, சிறப்பு மருத்துவத் துறை நிபுணர்களை உருவாக்க புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

