ஊழியர்கள் போராட்டம்: மைசூர் சில்க் சேலை உற்பத்தி கடும் பாதிப்பு

ஊழியர்கள் போராட்டம்: மைசூர் சில்க் சேலை உற்பத்தி கடும் பாதிப்பு

2 mins read
6c1b99f6-7771-422c-8001-1afe60ecd644
ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் புகழ்பெற்ற மைசூர் சில்க் சேலைகளின் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. - படம்: இந்தியா டுடே

மைசூர்: கர்நாடகப் பட்டுத் தொழில் கழகத்தின் (கேஎஸ்ஐசி) தொழிற்சாலைக்குச் சொந்தமான நிலத்தை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை அருங்காட்சியகம் அல்லது விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக இளைஞர் நலன்; விளையாட்டுத் துறைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தாங்கள் பணிபுரியும் நிலம் பறிக்கப்பட்டால் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும், தங்களது வேலையும் பறிபோகும் என்ற அச்சத்தில் ஊழியர்களும் தொழிற்சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், புகழ்பெற்ற மைசூர் சில்க் சேலைகளின் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.

டி. நரசிப்புராவில் உள்ள கச்சா பட்டு நூல் சுருட்டும் பிரிவில் பணிபுரியும் 192 ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

இவர்களுக்கு ஆதரவாக மைசூரில் உள்ள ஏறக்குறைய 700 ஊழியர்களும், சன்னப்பட்டணத்தில் உள்ள 200 ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர். இதனால் சேலை உற்பத்தி செய்யும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

தற்போது மூன்று பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களும் டி. நரசிப்புராவில் உள்ள கேஎஸ்ஐசி பட்டு நூற்பு ஆலை அருகே கூட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

“மைசூர் சில்க் என்பது வெறும் துணி மட்டுமல்ல. அது கர்நாடகாவின் பாரம்பரிய அடையாளம். புவிசார் குறியீடு பெற்றது. பட்டுத் தொழில் பயன்பாட்டிற்காகவே நிலத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். நூற்புப் பிரிவைப் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கேஎஸ்ஐசி நிர்வாக இயக்குநர் ஜெஹெரா நசீம், பட்டு வளர்ச்சித் துறை செயலாளர் ஆர். கிரீஷ் ஆகியோர் போராட்ட இடத்திற்குச் சென்று ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உற்பத்தியை மீண்டும் தொடங்குமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஊழியர்கள் நிராகரித்து விட்டனர்.

“முதலமைச்சர் சித்தராமையா நேரில் தலையிட்டு இந்த நில விவகாரம் தொடர்பில் நிரந்தரத் தீர்வு காணும் வரை தாங்கள் வேலைக்குத் திரும்பப் போவதில்லை,” என்று ஊழியர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்