ரூ.50 லட்சம் இருந்த வங்கியின் கதவை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்

2 mins read
8e2978f9-7e5f-4806-b3c8-e04389a752aa
பூட்டப்படாமல் இருந்த வங்கி. - படம்: ஊடகம்

சென்னை: ஆவடியில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கிக் கிளையின் மரக்கதவு மற்றும் இரும்பால் ஆன கதவுகளை ஊழியர்கள் பூட்டாமல் சென்றதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி செக்போஸ்ட் அருகே, அரசு பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் (பாரத ஸ்டேட் வங்கி) கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுவது வழக்கம்.

இந்நிலையில் வியாழக்கிழமை (05.06.2025) நள்ளிரவு 12:30 மணியளவில், ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ. சிவக்குமார், ஆவடி சி.டி.எச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குறிப்பிட்ட வங்கிக் கிளையை அவர் கடந்தபோது, வங்கியின் மரக்கதவும் இரும்பால் ஆன கதவும் பூட்டாமல் இருந்ததை கவனித்துள்ளார்.

இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் பூபாலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவரும், கடைநிலை ஊழியர் சுரேந்தரும் வங்கியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என தெரிந்தது. விசாரணையில், இரவு 7:30 மணியளவில் ஊழியர்கள் கவனக்குறைவாக வங்கியின் கதவுகளை பூட்டாமல் சென்றது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், வங்கியில் 3,000க்கும் மேற்பட்டோர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்பதும், அன்று மட்டும் வங்கியில் 50 லட்சம் ரூபாய் இருப்பு இருந்ததாகவும் தெரிய வந்தது.

உரிய நேரத்தில் போலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் திருடு போகாமல் தப்பியது.

இந்நிலையில், வங்கிக்கு முழு நேர காவலாளி நியமிக்கப்பட வேண்டும் என்று காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டார். மேலும் ரோந்து பணியின்போது சிறப்பாக செயல்பட்ட காவல் துணை ஆய்வாளர் சிவக்குமாரை அவர் வெகுவாக பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்