கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கோல்கத்தா நகரில் டிராம் வண்டியின் மணிச் சத்தத்தைக் கேட்டாலே தீப் தாசுக்கு அன்றைய பொழுது உற்சாகமாகத் தொடங்கிவிடும்.
“அடிக்கடி வரும் பேருந்துகளும் இருக்கின்றன. ஆனால் நான் டிராம் வண்டிக்காகக் காத்திருப்பேன்,” என்று 18 வயது மாணவர் கூறினார்.
மெதுவாக நகரும் போக்குவரத்து கட்டமைப்பை அதன் ரசிகர்கள் மெகாநகரத்தின் பெருமை என்று போற்றுகின்றனர். கோல்கத்தா வளர்ச்சி பெற்ற வரலாற்றில் அது பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் 151 ஆண்டுகால டிராம் கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
டிராம் வண்டிகள் முறையாக பராமரிக்கப்படாததால் மெதுவாக அழிந்து வருகின்றன.
திரு தாஸ், டிராம்களைப் பாதுகாப்பதற்காகப் போராடும் கோல்கத்தா டிராம் பயனீட்டாளர் சங்கத்தின் (சிடியுஏ) உறுப்பினர்களில் ஒருவர்.
சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உயிர்வேதியியல் நிபுணருமான தேபாஷிஷ் பட்டாச்சார்யா, பசுமையை காரணம்காட்டும் நகர அதிகாரிகள் மலிவான போக்குவரத்தை இழக்க வேண்டியிருக்கும் என்று வாதிடுகிறார்.
இதற்கு தேவைப்படும் முதலீடு மிகவும் குறைவு என குறிப்பிட்ட அவர், சாத்தியமான டிராமின் பொருளியல் வெற்றிகளை அரசியல்வாதிகள் புறக்கணிப்பதாகவும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
டிராம் வண்டிகளின் ஆயுட்காலம் 50 முதல் 80 ஆண்டுகள் வரையிலாகும். மாறாக பேருந்துகள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை மட்டுமே செயல்படுகின்றன. அது மட்டுமல்லாமல் டிராம்களை நடத்துவதற்கான செலவும் குறைவு.
“டிராம்கள் பலருக்கு நகரத்தின் ஆன்மாவாக இருக்கின்றன. இந்தியாவில் டிராம்கள் உள்ள ஒரே நகரம் கோல்கத்தாதான், இது அகற்றப்பட்டால், இதன் பெருமையை கோல்கத்தா மட்டுமல்ல நாடும் இழக்க வேண்டியிருக்கும் என்றும் தேபாஷிஷ் பட்டாச்சார்யா எச்சரிக்கிறார்.


