புதுடெல்லி: இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, ‘எரிசக்திப் பாதுகாப்பு என்பது தற்போதைய காலத்தின் மிக முக்கியத் தேவை’ என்று வலியுறுத்தினார்.
13ஆவது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், நவீன உலகின் மின்சாரத் தேவைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
ஐந்து அணு உலைகளை அமைப்பதற்கும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்திகள், மற்றும் தரவு மையங்களின் (Data Centers) அபரிமிதமான வளர்ச்சியால், எதிர்காலத்தில் இந்தியாவின் மின்சாரத் தேவை இருமடங்காக அதிகரிக்கும் என்றும் அதை எதிர்கொள்ள ஆற்றல் வளங்களைப் பெருக்குவது கட்டாயம் என்றும் கூறினார் திரு மோடி.
அணுசக்தி இலக்கு
இந்தியாவின் மாற்று எரிசக்தி இலக்குகள் குறித்துப் பேசிய அவர், நாட்டில் புதிதாக 5 அணு உலைகளை அமைப்பதன் மூலமும், மரபுசாரா வழிகள் மூலமும் 200 கிகாவாட் (GW) அணுசக்தியைப் பெறுவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
‘சூரிய ஒளி கூரை திட்டத்தின்’ கீழ் இதுவரை 50 லட்சம் வீடுகளில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
எரிவாயு விநியோகம்
2014ஆம் ஆண்டுக்கு முன்பாக 70 நகரங்களில் மட்டுமே இருந்த குழாய் வழி எரிவாயு விநியோகம், தற்போது 700 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள உற்பத்தி, மின்னிலக்க மாற்றங்களால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா இத்தகைய அதிவேக முன்னேற்றத்தைக் கண்டதில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வளர்ச்சிப் பட்டியல்
மின்னணு பொருள்கள் உற்பத்தி 7 மடங்கும், கைப்பேசி உற்பத்தி 33 மடங்கும் அதிகரித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி 4 மடங்காகவும், உயர் தொழில்நுட்ப ரயில் பெட்டிகள் உற்பத்தி 21 மடங்காகவும் உயர்ந்துள்ளது.
காப்புரிமை அனுமதிகள் 4 மடங்கு உயர்ந்துள்ளதோடு, மின்னிலக்க பரிவர்த்தனைகள் 100 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் வளர்ச்சிப் பட்டியலை வாசித்தார்.
சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-க்குள் இந்தியாவை ஒரு ‘வளர்ச்சியடைந்த நாடாக’ மாற்றுவதே 140 கோடி இந்தியக் குடிமக்களின் முதன்மை இலக்கு என்றார் பிரதமர் மோடி.
இந்திய சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் விழா விமரிசையாக நடைபெற்றது.
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வண்ணமயமான இந்தியப் பாரம்பரிய உடையில் அவர் மேடையில் தோன்றினார். தொடர்ந்து 13ஆவது சுதந்திர தின விழாவில் அவர் உரையாற்றினார்.
அவர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியபோது, தொடர்ந்து 21 குண்டுகள் முழங்கின. சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்படும் நிகழ்வுவையும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


