பெங்களூரு: பிரபல தொழிலதிபரான ஜார்ஜ் சொரொஸ் ஆதரவு பெற்ற அமைப்பான, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும், ஓபன் சொசைட்டி பவுண்டேஷனில் (ஓஎஸ்எஃப்) அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
இது பொது சுகாதாரம், மனித உரிமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இயங்கும் ஓர் அமைப்பாகும்.
அந்நியச் செலாவணி மேலாண்மை சட்ட மீறல்களுடன் தொடர்புடைய புகார்களின் பேரில் அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் கூறின.
அமெரிக்க-ஹங்கேரிய தொழிலதிபரும் பெரும் முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரொஸ் ஜெர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பேசும்போது அதானி நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்து குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பாஜக பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அம்மாநாட்டில் மேலும் பேசிய ஜார்ஜ் சொரொஸ், “அதானி விவகாரம் குறித்து பிரதமர் மோடி அமைதியாகவே இருந்தால், கூட்டாட்சி அரசின் மீதான அவரது தலைமை பலவீனப்படும். எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஜார்ஜ் சொரொஸ் போன்றவர்கள் தலையிடக்கூடாது எனச் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒட்டுமொத்த இந்தியாவும் அவருக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்று ஸ்மிருதி இரானி கூறினார்.
ஜார்ஜ் சொரொஸ் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாக பாஜக பகிரங்கமாகச் சாடியது.
இந்நிலையில், ஜார்ஜ் சொரொஸ் ஆதரவு பெற்ற பெங்களூரு அமைப்பான ‘ஓஎஸ்எஃப்’ தலைமை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்தியாவில் உள்ள சட்டங்களின்கீழ், அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடற்ற நன்கொடைகளை வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் கட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக, ‘ஓஎஸ்எஃப்’ பல துணை நிறுவனங்களை அமைத்துள்ளது என்றும் அவற்றின் மூலம் நேரடி அன்னிய முதலீடு, ஆலோசனைக் கட்டணங்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நிதி கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது அந்நியச் செலாவணிச் சட்டத்தை மீறும் செயல் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் துணை நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக ஊடகத் தவவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனை நடவடிக்கை குறித்து அமலாக்கப் பிரிவு விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.