ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனை விவரம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் மதுபானக் கொள்கை விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பு தெரிவிக்கிறது.
துர்க் மாவட்டம் பிலாயில் உள்ள பூபேஷ் பாகல் வீட்டில் காலையிலேயே சோதனைகளை அமலாக்கத் துறையினர் தொடங்கினர்.
அதேபோல், சைதன்யா பாகல் மற்றும் அவருக்கு தொடர்புடைய 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பொய் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகல் வீட்டிற்குள் நுழைந்து அமலாக்கத்துறை விருந்தினர்கள் சோதனை செய்துள்ளனர்,” என்று பூபேஷ் பாகல் அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.
இந்தச் சதித்திட்டம் மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரசைத் தடுக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அது தவறான புரிதலாகும்,” என்றும் அந்தப் பதிவு தெரிவித்தது.