அகமதாபாத்: மின்னிலக்கப் பணம் என அழைக்கப்படும் ‘கிரிப்டோ’ நாணய மோசடி தொடர்பில் ரூ.1,646 கோடி மதிப்புள்ள ‘கிரிப்டோ’ நாணயத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ‘கிரிப்டோ’ நாணயம் பிரபலமாக இருக்கிறது. இதை மையமாக வைத்து குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த 38 வயது சதீஷ் கும்பானி கடந்த 2016ஆம் ஆண்டில் ‘பிட்கனெக்ட்’ என்ற பெயரில் ‘கிரிப்டோ’ நாணயத்தை அறிமுகம் செய்தார்.
இதில் முதலீடு செய்தால் ஒரு மாதத்தில் 40 விழுக்காடு வரை லாபம் ஈட்டலாம் என ஆசைவார்த்தை கூறியதுடன் புதிய வாடிக்கையாளரை இணைக்கும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் சதீஷ் கும்பானி அறிவித்தார்.
இதனால் உலகம் முழுவதும் ‘பிட்கனெக்ட்’ பிரபலமானது. கிட்டத்தட்ட 95 நாடுகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்தனர். ஒரு ‘பிட்கனெக்ட்’ நாணயத்தின் விலை சராசரியாக ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் உலகின் மிகச்சிறந்த 20 ‘கிரிப்டோ’ நாணயங்களில் ஒன்றாக ‘பிட்கனெக்ட்’ உருவெடுத்தது.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில் ‘பிட்கனெக்ட்’ மூடப்பட்டது. அதே ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அமெரிக்க நீதிமன்றத்தில் பல்வேறு வாடிக்கையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டில் சதீஷ் கும்பானிக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சதீஷ் கும்பானி தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடி தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சதீஷ் கும்பானிக்குச் சொந்தமான ரூ.489 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள், அகமதாபாத்தில் உள்ள சதீஷ் கும்பானிக்கு சொந்தமான இடங்களில் கடந்த பிப்ரவரி 11 முதல் 15ஆம் தேதி வரை சோதனை நடத்தினர். அப்போது ரூ.1,646 கோடி மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்களை அமலாக்கத்துறை முடக்கியது. ஒரு சொகுசு கார், கணினி, மடிக் கணினி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.