புவனேஸ்வர்: தொழிலதிபர் ஒருவரை பண மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை துணை இயக்குநர் ஒடிசாவில் கைது செய்யப்பட்டார்.
சிந்தன் ரகுவன்ஷி என்ற அந்த அதிகாரி, கடந்த 2013ஆம் ஆண்டு இந்திய வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.
அவரை வியாழக்கிழமை அன்று (மே 29) சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
உள்ளூர் சுரங்கத் தொழிலதிபர் ஒருவர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வெளிவந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அத்தொழிலதிபரை அணுகிய சிந்தன் ரகுவன்ஷி, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், வழக்கில் இருந்து அவர் பெயரை நீக்குவதாகக் கூறியுள்ளார்.
இதை நம்பிய தொழிலதிபர், முதல் தவணையாக ரூ.20 லட்சம் அளித்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிபிஐ, சிந்தன் ரகுவன்ஷி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டபோது கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் சிக்கியது.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

