திருவனந்தபுரம்: கொச்சி கனிமவள மோசடி வழக்குத் தொடர்பில் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை (மே 27) அதிரடிச் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பினராயி விஜயனின் மகள் வீணாவிற்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம், ‘கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) கனிம நிறுவனத்திடம் இருந்து எவ்வித சேவைகளும் வழங்காமல் ரூ.1.72 கோடி முதல் ரூ.2.70 கோடி வரை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தீவிர மோசடிப் புலனாய்வு அலுவலகம் 25 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்த நிலையில், அதிரடிச் சோதனை அரங்கேறியுள்ளது.
பினராயி விஜயன் வீடு மட்டுமன்றி, கோழிக்கோட்டில் உள்ள அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான பி.ஏ.முகம்மது ரியாஸ் இல்லத்திலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்படுவது கேரள அரசியலில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவன மோசடிக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் வீணா விஜயனுக்குப் பத்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த விவகாரம் முதன்முதலாக வெளிச்சத்திற்கு வந்தது. அதில் சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து 2017 முதல் 2020 வரை நிதி முறைகேடு நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் வீணா உட்பட பலரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
இதனிடையே, பினராயி விஜயன், முகம்மது ரியாஸ் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
சோதனை நடத்தப்பட்ட வீடுகளுக்குமுன் திரண்ட அக்கட்சியினர், அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, பினராயி விஜயனுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
இதன் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது என்றும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் கைகோத்து கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவிழக்கச் செய்ய முயற்சி செய்கின்றன என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.

