சென்னை: நடிகர் துல்கர் சல்மானின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
சொகுசு கார் வாங்கியது தொடர்பாக, சில நாள்களுக்கு முன்பு துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தற்போது அமலாக்கத்துறையும் இவ்விவகாரத்தில் களமிறங்கி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ‘ஆபரேஷன் நும்கோர்’ என்ற பெயரில் கேரளா முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறை சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையின்போது, வரி செலுத்தாமல் இருவரும் சொகுசு கார்கள் வாங்கியது தெரியவந்தது. இருவரும் பூட்டானில் இருந்து இந்த கார்களை வாங்கியுள்ளனர்.
இதையடுத்து, துல்கர் சல்மான் வீட்டில் இருந்து இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுங்கத்துறையின் நடவடிக்கையை அடுத்து, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் துல்கர்.
தனது காரை இந்திய சிவசேவை சங்கத்தில் இருந்து வாங்கியதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில், புதன்கிழமை (அக்டோபர் 8) சென்னை அபிராமபுரத்தில் உள்ள துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் அங்கு இருந்தனர்.
இதற்காக கேரளாவில் இருந்து அதிகாரிகள் சென்னை வந்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.