அமலாக்கத் துறை சாதனை: ரூ.2.36 லட்சம் கோடி சொத்துகள் முடக்கம்

அமலாக்கத் துறை சாதனை: ரூ.2.36 லட்சம் கோடி சொத்துகள் முடக்கம்

1 mins read
94% வழக்குகளில் தண்டனை
8de2c97f-191b-491c-ae34-a049c7ac270f
மத்​திய அரசின்கீழ் செயல்​படும் அமலாக்​கத் துறையின் 70வது நிறுவன தின விழா டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில் மத்​திய நிதித் துணையமைச்​சர் பங்​கஜ் சவுத்​ரி, வருவாய்த் துறைச் செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்​த​வா, அமலாக்​கத் துறை மூத்த அதி​காரி​கள் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: மத்திய அமலாக்கத் துறையின் 70வது நிறுவன தின விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இதுவரை 94 விழுக்காட்டு வழக்குகளில் நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் இதுவரை ரூ.2,36,017 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.81,422 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 170 விழுக்காடு அதிகம்.

தற்போது மின்னிலக்க நாணய, இணையக் குற்றங்கள், பயங்கரவாதத்துக்கு நிதி உதவி போன்ற புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப அமலாக்கத் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

சொத்து முடக்கத்துடன் நிற்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் துறை தீவிரம் காட்டிவருகிறது.

வங்கி, சொத்துச் சந்தை (ரியல் எஸ்டேட்) மோசடிகளால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் இதுவரை ரூ.63,142 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பிஏசிஎல் வழக்கில் மட்டும் ரூ.15,581 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற 21 பொருளியல் குற்றவாளிகளின் ரூ.2,178 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நிலுவையில் உள்ள 2,400 வழக்குகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் துறை இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்