தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை

2 mins read
80d4e2eb-9157-40e0-aa54-e401fe8d6335
அனில் அம்பானி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: பிரபல தொழிலதிபரும் முகேஷ் அம்பானியின் சகோதரருமான அனில் அம்பானியை, எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா) வங்கி மோசடியாளர் என அறிவித்துள்ளது.

இதையடுத்து, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் அனில் அம்பானிக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் அமலாக்கத்துறை வியாழக்கிழமை (ஜூலை 24) அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

அனில் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனமும் மோசடி நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களை முன்வைத்து, யெஸ் வங்கியிடம் இருந்து ரூ.31,580 கோடியைத் தனது நிறுவனங்களுக்காக கடனாகப் பெற்றுள்ளார் அனில் அம்பானி.

இத்தொகையில் ஏறக்குறைய 44 விழுக்காடு, ஏற்கெனவே பெற்ற சில கடன்களைத் திருப்பிச் செலுத்த அவர் பயன்படுத்தி உள்ளார். ரிலையன்ஸ் துணை நிறுவனங்களுக்கு ரூ.12,692 கோடி மாற்றப்பட்டுள்ளது.

இவரது நிறுவனங்கள் இதுவரை வங்கிகளிடம் இருந்து ரூ.41,863 கோடி கடன் பெற்றிருக்கும் நிலையில், ரூ.28,421 கோடிக்கான பயன்பாடு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை என்னவானது எனத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அனில் அம்பானியையும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தையும் மோசடிப் பிரிவில் வகைப்படுத்தியுள்ளது எஸ்பிஐ வங்கி.

ஏற்கெனவே யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், சில மோசடிப் புகார்களில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், அவரது வங்கியில் இருந்து அனில் அம்பானி கடன் பெற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சோதனை நடவடிக்கைகளை அடுத்து, அனில் அம்பானியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் மும்பையில் வைத்து அவரிடம் இந்த விசாரணை நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் முகேஷ் அம்பானி. இந்நிலையில், அவரது சகோதரர் அனில் அம்பானி மோசடிப் புகாரில் சிக்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்