புவனேஸ்வர்: ஊழல் கண்காணிப்புத் துறையினர் தம் வீட்டைச் சோதனையிட்டபோது, ஆடவர் ஒருவர் சன்னல் வழியாக ஐந்நூறு ரூபாய் பணக்கட்டுகளை வீசியெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நிகழ்ந்தது.
பைகுந்த நாத் சாரங்கி என்ற அந்த ஆடவர் மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளராக இருக்கிறார்.
அவர் ஊழல் செய்வதாகவும் தமது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பதாகவும் நீண்டகாலமாகப் புகார் வந்தது.
இதனையடுத்து, ஒடிசா ஊழல் ஒழிப்புத் துறையினர் அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர் அப்போது, ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணமும் வேறு சொத்துகளும் சிக்கின.
சாரங்கி புவனேஸ்வர் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கமும் அங்குலில் உள்ள இன்னொரு வீட்டில் ரூ.1.1 கோடி ரொக்கமும் சிக்கியதாக அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
“ஊழல் கண்காணிப்புத்துறை அதிகாரிகளைக் கண்டதும் சாரங்கி சன்னல் வழியாகப் பணக்கட்டுகளை வீசியெறிந்தார். சாட்சிகளின் முன்னிலையில் ரொக்கம் கைப்பற்றப்பட்டது,” என்று இன்னோர் அதிகாரி கூறினார்.
அத்துடன், அங்குலில் உள்ள சாரங்கியின் பரம்பரை வீட்டிலும் உறவினர்களது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. புவனேஸ்வரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
சாரங்கி பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முதல்நாள் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்கள் எட்டுப் பேர், 12 ஆய்வாளர்கள், ஆறு உதவி ஆய்வாளர்கள் உள்ளடங்கிய குழு அதிரடிச் சோதனைகளில் ஈடுபட்டது.

