சண்டிகர்: இந்தியாவின் சண்டிகர் போக்குவரத்து நிறுவனம் அண்மையில் பேருந்து ஓட்டுநர்களாக நியமித்த 97 பேரில் முதுநிலைப் பொறியியல் (எம்.டெக்.), முதுகலைப் பட்டதாரிகள் பட்டம் பெற்றவர்களும் அடங்குவர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுதொடர்பான அதிகாரத்துவ ஆவணங்களைத் தான் கண்டதாகத் தெரிவித்த அந்த ஊடகம், அமித் குமார் என்பவர் எந்திரவியல் பொறியியலில் எம்.டெக். பட்டம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டது.
அதுபோல, மேலும் மூவர் இளநிலைப் பொறியியல் பட்டதாரிகள் என்றும் இருவர் மானுடவியல் முதுநிலைப் பட்டதாரிகள் என்றும் அது தெரிவித்தது.
பேருந்து ஓட்டுநர் வேலைக்கு பள்ளிக் கல்வியே போதுமானது என்ற நிலையில் மேலும் பல பட்டதாரிகளும் அவ்வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். பேருந்து ஓட்டுநர் பணிக்கு ஒரு மாதத்திற்கு ரூ.5,910 (S$86) முதல் ரூ.20,200 (S$293) வரை அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.
அவ்வேலைக்கு எழுத்துத் தேர்வு, வாகனம் ஓட்டிக் காட்டுதல், மருத்துவச் சோதனை என மூன்றுநிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், பேருந்து ஓட்டுநராகப் பணி நியமனம் பெற்ற 97 பேருக்கும் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 25) அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
அவ்வாணைகளை வழங்கிச் சிறப்புரையாற்றிய சண்டிகர் போக்குவரத்து நிறுவன நிர்வாகி குலாப் சந்த் கட்டாரியா, “பேருந்து ஓட்டுநர் என்பவர் வெறும் ஓட்டுநர் மட்டுமல்லர். அவர்கள் சண்டிகர் நகரின் வேகம், பயணிகள் பாதுகாப்பு, காலந்தவறாமை ஆகியவற்றின் காவலர்கள். பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் கடமையை முழு ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்போடும் செய்தால் மட்டுமே மாணவர்கள், ஊழியர்கள், குடும்பத்தினர் என அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பயணம் செய்ய முடியும்,” என்றார்.