தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொறியியல் அதிசயம்: சாதித்த இந்தியப் பெண் பொறியாளர்

2 mins read
27fee2cc-fad0-4d2c-b956-c5d0f23b5b52
மாதவி லதா. - படம்: ஊடகம்

அமராவதி: காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் ஆக உயரமான ரயில் பாலம் அண்மையில் திறக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பாலத்தை வடிவமைத்தது ஆந்திராவைச் சேர்ந்த பெண் பொறியாளர் மாதவி லதா என்றும் இதற்காக அவர் 17 ஆண்டுகளை அர்ப்பணித்து உழைத்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

பொறியியல் அதிசயம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பாலத்தை கட்டும் பணி 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதிலும், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

அதன் பிறகுதான் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் பொறியியல் துறை பேராசிரியையாக இருந்த மாதவி லதாவின் உதவி கோரப்பட்டது.

பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு பாலத்தை வடிவமைத்து கட்டுமானத் திட்டத்தையும் வகுத்துக்கொடுத்துள்ளார் மாதவி லதா.

கடும் நிலநடுக்கம், வெடிகுண்டு தாக்குதல், சூறாவளிக் காற்று என எதுவும் அப்பாலத்தைச் சாய்த்துவிட முடியாது. அப்பாலம் 120 ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் என்று தரச்சான்று அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மாதவி லதா. அரசுப் பள்ளியில் படித்த இவருக்கு, மருத்துவராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது.

பண வசதி இல்லாததால் பொறியியல் படித்தார். பிடெக் முடித்த பின்னர், என்ஐடி, ஐஐடி என உயர் கல்வி நிலையங்களில் தன் கல்வியைத் தொடர்ந்த மாதவி லதா, 2003ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியையாகப் பணியில் சேர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்