கொவிட்-19 நிலவரம் மேம்பட்டதில் பத்மநாபசாமி கோவிலுக்குள் அனுமதி

கொவிட்-19 நிலவரம் மேம்பட்டதில் பத்மநாபசாமி கோவிலுக்குள் அனுமதி

2 mins read
b279b1a1-e6fc-4902-8a4a-e08df3128ab7
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில். படம்: இணையம் -

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று (ஜூன் 24 தேதி) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையிலும், 5.15 முதல் 6.15 மணி வரையிலும், காலை 8.30 முதல் 10 மணி வரையிலும், 10.30 முதல் 11.15 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.15 மணி வரையிலும், 6.50 முதல் 7.20 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரே நேரத்தில் 15 பக்தர்கள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி அனுமதிக்கப்படுவர்.

இதேபோல் குருவாயூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்வரும் பகுதி குறிப்பிடப்பட்டிருந்தது.

'அரசு உத்தரவுபடி குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று (ஜூன் 24 தேதி) திறக்கப்படுகிறது. இணைய முன்பதிவு அடிப்படையில் தினசரி 300 பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் பக்தர்கள் நாலம்பலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதே போல் திருமணம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு திருமணத்தில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்ச்சிகளில் காணொளி, புகைப்படம் எடுக்க 2 பேருக்கு மட்டுமே அனுமதி.

ஒரு நாளைக்கு எத்தனை திருமணங்கள் வரை நடத்தலாம் என்பது குறித்து குருவாயூர் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்யும்'.

அதே சமயத்தில் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உள்ள இடங்களில் கோவில்களை திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.