திறமை உள்ளோரை அரசு வழக்கறிஞராக நியமிக்கும் காலம் முடிந்துவிட்டது: நீதிபதிகள்

திறமை உள்ளோரை அரசு வழக்கறிஞராக நியமிக்கும் காலம் முடிந்துவிட்டது: நீதிபதிகள்

கோப்புப் படம்: தினத்தந்தி

15 Oct 2026 - 5:32 pm

1 mins read

மதுரை: திறமையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க விரும்பிய காலம் மலையேறிவிட்டது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்குமார் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நாகர்கோவிலில் இருந்து நெல்லை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட ஒரு வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் முறையாகச் செயல்படவில்லை என்று புகார் தெரிவித்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்த பின்னர் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வாசித்தனர்.

“அரசுத் தரப்பு வழக்கறிஞரின் நடத்தையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு, அதை நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டால் மட்டுமே அவர்மீது வழக்கறிஞர் சங்கம் நடவடிக்கை எடுக்க முடியும்.

“ஆட்சியில் இருப்பவர்கள் திறமையான அரசு வழக்கறிஞர்களை நியமிக்க விரும்பிய காலம் மலையேறிவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்குப் பதவி வழங்குகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவர்கள் பதவியில் இருந்து விலகவேண்டிய சூழல் உள்ளது.

“அரசுத்தரப்பு வழக்கறிஞர் அச்சம் இல்லாமல் செயல்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். ஆவணங்களை முழுமையாகப் படித்து திறம்பட வழக்கை நடத்த வேண்டும்.

“காவல்துறை கூறுவதை அப்படியே கிளிப்பிள்ளைபோல அவர் நீதிமன்றத்தில் திரும்பச் சொல்லக்கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கையை ஏற்க வேண்டியதில்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்றனர் நீதிபதிகள்.

குறிப்புச் சொற்கள்
நீதிபதிஉயர் நீதிமன்றம்வழக்கு