தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிப்ரவரி 5ல் டெல்லி சட்டமன்றம், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு தேர்தல்

3 mins read
9f77d355-9e93-48a6-9afa-71cbb7b48aeb
டெல்லி சட்டமன்றத்தின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.  - படம்: இணையம்

புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத்தின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அதேநாளில் நடைபெறுகிறது.

வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நிறைவடையும். 18ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்ப பெற 20ஆம் தேதி கடைசி நாள். பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) அறிவித்தார்.

“டெல்லி தேர்தலில் பண பலம் தடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். முறையான சோதனைகள் நடத்தப்படும். சமூக ஊடகங்களைத் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பொய் செய்திகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.

டெல்லி தேர்தல்

டெல்லிக்கு இது 8வது சட்டமன்றத் தேர்தல். இத்தேர்தலில் 1.55 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

மொத்தம் 13,033 வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் டெல்லிக்கு என சிறப்பு அறிவிப்புகள் ஏதும் இடம்பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நடைபெறுகிறது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. பாஜகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கட்சித் தாவல்கள், காரசார வாக்குவாதங்கள் என அரசியல் களம் களை கட்டியுள்ளது. தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் கடும் குளிருக்கு இடையேயும் அரசியல் களத்தில் அனல் பறக்கும்.

டெல்லி சட்டமன்றத்துக்கு 2020ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. - படம்: இணையம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்

தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்குத் தொகுதி, மேலும் உத்தரப் பிரதேசத்தின் மில்கிபூர் தொகுதி ஆகிய வற்றுக்கும் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி காலமானதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதி வரிசையில், 98வது தொகுதியாக ஈரோடு கிழக்குத் தொகுதி உள்ளது. குறைந்த பரப்பளவில், அதிக வாக்காளர்களை கொண்டது. ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, மொத்தம் 226,433 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தலில் உருவானது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா 2023ல் காலமானதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

குறிப்புச் சொற்கள்