போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கெளரவ் தேவ் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவருடைய உறுப்புகள் நால்வருக்குத் தானமாக வழங்கப்பட்டன.
அந்தப் பேருதவியால் நான்கு பேருக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திரைப்பட ஆட்சேர்ப்பு ஒருங்கிணைப்பாளரான கெளரவ் சிறுவயதிலிருந்தே ‘மோயாமோயா’ (Moyamoya) என்ற அரிய மூளை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜூலை 13ஆம் தேதி அவருக்கு மூளையில் ரத்தச் சிதைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பிலிருந்த அவரது உடல்நிலை ஜூலை 17ஆம் தேதி மோசமடைந்தது. இந்நிலையில், ஜூலை 26ஆம் தேதி இரவு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மகனை இழந்த துயரத்திலும் அவரது பெற்றோர் உறுப்புதானத்திற்கு முன்வந்தனர். இதன்மூலம், கெளரவ் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே 42 வயது நோயாளிக்குக் கல்லீரலும், மற்றொரு தனியார் மருத்துவமனையில் 22 மற்றும் 55 வயதுடைய இரு பெண்களுக்குச் சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
மேலும், ‘இடையூறில்லாப் போக்குவரத்து’ திட்டத்தின்மூலம் கெளரவ்வின் இதயம் அகமதாபாத் கொண்டு செல்லப்பட்டு, 28 வயது நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
கெளரவின் கண்கள் சங்கரா கண் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.
இறப்பிலும் நான்கு பேருக்கு வாழ்வளித்த கெளரவுக்கு இந்தூர்க் காவல்துறை அதிகாரபூர்வ மரியாதையுடன் விடைகொடுத்தது.

