சண்டிகர்: பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்து ஒழிப்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என அதன் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் சாத்தியமான, மிகக் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் வேட்டையாடப்படுவர் என்றார்.
அவர்கள் செய்த குற்றத்துக்கு கடும் தண்டனை கிடைப்பதை இந்திய அரசு உறுதிசெய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வலிமையான மாநிலங்களைக் கொண்ட வலிமையான இந்தியாவை உருவாக்குவதே மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை என்று குறிப்பிட்ட அமித்ஷா, நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
“போக்சோ சட்டத்தின்கீழ் பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான விசாரணை நடைபெற வேண்டும். எந்த நாகரிகச் சமூகமும் கொடூரமான பாலியல் குற்றங்களை ஏற்றுக்கொள்ளாது,” என்றார் அமித்ஷா.
முன்னதாக, அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

