தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

60 ஆயிடுச்சு, ஆனாலும் காதல் ஜோடிதான்; அதிகரிக்கும் தாத்தா- பாட்டிகள் திருமணம்

2 mins read
25f0f11a-9b4d-4d77-8771-f943a6b07886
கை நிறைய சம்பாதித்தாலும் மனதிற்கு ஆறுதல் தரும் துணையில்லாத வேதனை அவர்களை வாட்டி வதைக்கிறது. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் புதிய வகை கலாசாரம் பரவி வருகிறது. வயது முதிர்ந்த தாத்தா பாட்டிகள் மீண்டும் திருமணம் செய்து வருகின்றனர்.

தங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலும், அவர்கள் கை நிறைய சம்பாதித்தாலும் மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய துணையில்லாததால் வேதனை அவர்களை வாட்டி வதைக்கிறது.

தங்கள் இதயத்துடன் ஒன்றிணையும் உறவை அவர்கள் தேடி வருகிறார்கள். இதனால் தடைகளைத் தாண்டி வாழ்க்கையில் பயணம் செய்யத் தயாராகி வருகின்றனர். திருமணத்துக்கான புதிய துணையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதன் மூலம் முதியவர்கள் தனிமையில் படும் வேதனையை அடையாளம் காண முடிகிறது.

கொரோனா காலத்தில் பலர் கணவன், மனைவியை இழந்துள்ளனர். சாலை விபத்துகள் நோய்வாய்ப் படுதலால் தங்கள் துணையை இழந்தவர்களும் உள்ளனர்.

மேலும் சிலர் பிள்ளைகளின் வாழ்க்கையை வடிவமைக்கும் பொறுப்பினால் வேறு திருமணத்தை நினைக்காமல் இருந்துள்ளனர். அவர்கள் தற்போது திருமண உறவை நாடுகின்றனர்.

இதேபோல் இளமையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருப்பவர்களும் முதுமைக் காலத்தில் தங்களுக்கு ஒரு துணை வேண்டும் என எண்ணுகின்றனர்.

விவாகரத்து போன்றவற்றால் கணவன் மனைவியைப் பிரிந்தவர்களும் தற்போது திருமண ஏற்பாடுகளுக்குத் தயாராகி வருகின்றனர்.

இப்படி வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று சுயம்வரம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சில குடும்பங்களில் பிள்ளைகளே தானாக முன்வந்து தங்களுடைய பெற்றோருக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்த சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் முதியோர்கள் தனியாகச் சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இரு வீட்டாரும் விரும்பினால் திருமணத்தை நடத்தவும் ஏற்பாடு செய்கின்றனர்.

இதுபோன்ற வயது முதிர்ந்த திருமணத்தில் சாதி பாகுபாட்டை பலர் பார்ப்பது இல்லை. தனியார் நிறுவனத்தின் இந்த சுயம்வர நிகழ்ச்சியில் ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து அந்த நிறுவனத்தினர் கூறுகையில், “வயதான காலத்தில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அவர் இல்லையே என்ற குறை பல முதியோருக்கு ஏற்படுகிறது. தனிமையில் இருப்பவர்கள் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை மன அழுத்தத்தால் மாரடைப்பால் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“இதுபோன்ற பிரச்சினைகளை உணர்ந்து, தனிமையில் இருக்கும் முதியோருக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தோமலகுடாவில் உள்ள ஏவி கல்லூரியில் முதியோருக்கான சுயம்வரம் நடத்துகிறோம்.

“கடந்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3,000 முதியோர் எங்கள் தளத்தைப் பயன்படுத்தியுள்ளனர். திருமணங்களை இலவசமாக நடத்துகிறோம்.

“முன்னதாக சட்ட ஒப்பந்தம் செய்து கொள்கிறோம். அதில் இருவரின் அசையா சொத்து, சொத்துகள், கடன்கள், யாருக்கு என்ன பிரச்சினை உள்ளது போன்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்து வருகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்