தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவிற்குக் கூடுதல் வாக்கு; தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 mins read
da351a94-bf75-4a3d-a129-db09cff916f5
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

காசர்கோடு: மாதிரி வாக்குப்பதிவின்போது குறைந்தது நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், காசர்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) மாதிரி வாக்குப்பதிவு இடம்பெற்றது. அனைத்து 190 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சோதித்துப் பார்க்கப்பட்டன.

ஒவ்வோர் இயந்திரத்திலும் ‘நோட்டா’ உட்பட பத்துச் சின்னங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் பாஜகவின் தாமரைச் சின்னம் முதலாவதாக இருந்தது.

ஒரு நேரத்தில் 20 இயந்திரங்கள் சோதித்துப் பார்க்கப்பட்டன. ஓர் இயந்திரத்தில் பத்துச் சின்னங்களின் பொத்தான்களும் ஒருமுறை மட்டும் அழுத்தப்பட்டன. அப்போது, நான்கு இயந்திரங்களில் ‘விவிபேட்’ ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவாகி இருப்பதாகக் காட்டின.

பாஜகவின் தாமரைச் சின்னப் பொத்தானை அழுத்தாதபோதும் அக்கட்சிக்கு ஒரு வாக்கு பதிவானது.

இதனையடுத்து, காசர்கோடு தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கே இன்பசேகரிடம் இடதுசாரி முன்னணி, ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் புகார் அளித்தனர்.

இதனிடையே, வாக்கு எண்ணிக்கையின்போது ‘விவிபேட்’ ஒப்புகைச்சீட்டுகளையும் முழுமையாக எண்ணி, சரிபார்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையன்று நடைபெற்றது.

அப்போது, காசர்கோடு மாதிரி வாக்குப் பதிவின்போது பாஜகவிற்குக் கூடுதல் வாக்கு பதிவானதாக ‘மனோரமா ஆன்லைன்’ வெளியான செய்தியை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து, அந்தப் புகார் குறித்து விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிற்பகலில் அதுகுறித்து விளக்கமளித்த ஆணையம், காசர்கோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை எனத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்