தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரத்தன் டாடா மறைவுக்கு முன்னாள் காதலி சிமி இரங்கல்

2 mins read
4a8be095-8968-4d5e-8eb2-15f9a18f8704
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, அவரது முன்னாள் தோழியும் நடிகையுமான சிமி கரேவால். - கோப்புப்படம்: ஊடகம்

மும்பை: தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பையில் புதன்கிழமை காலமானார்.

இந்நிலையில், அவரது முன்னாள் காதலியும் இந்தி நடிகையுமான சிமி கரேவால் (76 வயது) டாடாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிமி தனது எக்ஸ் தளத்தில், “நீங்கள் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். உங்கள் இழப்பைத் தாங்குவது மிகவும் கடினம். விடைபெறுங்கள் நண்பரே!” என்று பதிவிட்டுள்ளார்.

சிமி கரேவால் 1970-80களில் இந்தித் திரையுலகில் பிரபலமானவராக விளங்கியவர். அந்த நேரத்தில் ரத்தன் டாடாவும் சிமி கரேவாலும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் மணம் செய்துகொள்ளப் போவதாக அப்போது கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

சிமி கரேவாலின் தோ பதன், சாத்தி, மேரா நாம் ஜோக்கர், சித்தார்த்தா, கர்ஜ் மற்றும் உதீகான் (பஞ்சாபி மொழி) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

ரத்தன் டாடாவுக்கு நான்கு காதல் தோல்விகளாம். ஒருமுறை திருமணம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர், “நான்கு முறை திருமணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் நின்று போனது. எனக்கு மொத்தம் நான்கு காதல் தோல்விகள்,” என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

மேலும், “எனக்கு நிறைய உறவுகள் வந்தன. ஆனால், மனைவி என்று அழைக்கக்கூடிய ஒருவரை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. காதல் தோல்விக்குப் பின் வேலை மற்றும் வேலை நிமித்தமான பயணங்கள் காரணமாக என்னைப் பற்றிச் சிந்திக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

“திருமணமாகவில்லையே என்று நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. ஏனெனில், சிறு வயதிலேயே என் பெற்றோர் மணமுறிவுசெய்து கொண்டு பிரிந்து வாழ்ந்தனர். அதனால் மிகவும் பாதிக்கப்பட்டவன் நான்.

“எனது தாயார் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால், நான் படித்த பள்ளியில் சக மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானேன். அப்போது அதிலிருந்து மீண்டு வருவதற்கு எனக்கு என் பாட்டிதான் உறுதுணையாக இருந்தார்,” என்று ரத்தன் டாடா திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்