தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோல்கத்தா மருத்துவக் கல்லூரித் தலைவர் சாட்சியத்தை அழித்ததாகக் குற்றச்சாட்டு

2 mins read
மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை
a7aed3f1-6441-42c3-95c5-c14bb7d41804
ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் போராடிவரும் நிலையில், கல்லூரி வளாகத்தில் எதிர்ப்பைக் காட்டும் விதமாக வைக்கப்பட்டிருந்த உருவப்பொம்மை. - படம்: ராய்ட்டர்ஸ்

கோல்கத்தா: மேற்கு வங்கத் தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவரான இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்தக் கல்லூரியின் தலைவர் மீது சாட்சியத்தை அழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்திப் கோஷ் என்ற பெயருடைய அந்த முன்னாள் மருத்துவக் கல்லூரித் தலைவர் தற்பொழுது ஊழல் புரிந்த சந்தேகத்தின்பேரில் காவல்துறையில் தடுப்புக் காவலில் உள்ளார். இவருக்கு எதிராக இந்தியாவின் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவு மேலும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.

மேலும், அந்தக் கல்லூரி இருக்கும் பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் காவல் நிலைய அதிகாரியான அபிஜித் மொண்டால் என்பவர் குற்றச்செயல் நடந்த இடத்தை பாதுகாக்கத் தவறியதாகக் கூறி அவரை மத்திய புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

மொண்டால் கைது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கோல்கத்தா உயர் காவல்துறை அதிகாரி ஒருவர், “குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் பதிலளிக்கப்படும்,” என்று கூறினார்.

ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு மாதத்துக்கு மேலாக 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வேலையிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும் கொலை செய்யப்பட்ட மருத்துவர் விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டுமென்றும் அவர்கள் போராடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் திரு கோஷ் வேண்டுமென்றே சாட்சியத்தை அழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. திரு கோஷ், மற்றவர்கள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் சாட்சியத்தை அழிக்கக் காரணமாக விளங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியின் தேநீர் விருந்துபசரிப்பை ஏற்க மறுத்துத் தங்கள் போராட்டத்தை ஞாயிறன்றும் (செப்டம்பர் 15ஆம் தேதி) தொடர்ந்தனர். அவர்கள் ‘நீதி மட்டுமே வேண்டும்’ என முழக்கமிட்டு தேநீர் விருந்தைப் புறக்கணித்தனர்.

குறிப்புச் சொற்கள்