புதுடெல்லி: இந்தியாவில் மருத்துவ நுழைவுத் தேர்வுத் தாள்கள் கசிந்த விவகாரத்தில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தமது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) அன்று முடித்துக்கொண்டார்.
எனினும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இளையர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
கடந்த மே மாதம் நிகழ்ந்த தேர்வுத்தாள் கசிவால் ஏறக்குறைய இரண்டு மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
சிலர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட துயரமும் நேர்ந்தது.
இதையடுத்து, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) எனும் அமைப்பின் தலைமையில் நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டு அமைந்த அரசாங்கத்திற்குப் பிறகு, இளையர்கள் தொடுத்துள்ள மிகப்பெரிய சவாலாக இந்தப் போராட்டம் பார்க்கப்படுகிறது.
நிலவரத்தைக் கட்டுப்படுத்த புதுடெல்லியில் 17 ரயில் நிலையங்கள் மூடப்பட்டன; கைப்பேசி இணையச் சேவைகளும் முடக்கப்பட்டன.
போராட்டம் கோல்கத்தா, புனே, திருவனந்தபுரம் போன்ற பிற நகரங்களுக்கும் பரவியுள்ளது.
போராட்டக் குழுவினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் தெளிவாக எடுத்துரைப்போம் என்றும் போராட்டக் குழுவின் பேச்சாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
எனினும், கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
தேர்வுத்தாள் கசிவுச் சம்பவங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
ஆனால், தேர்வு முறையை முற்றிலும் சீரமைக்க வேண்டும் எனக் கூறி, அந்த யோசனையைப் போராட்டக்காரர்கள் நிராகரித்துவிட்டனர்.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை, தொடர்ச்சியான தேர்வுத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகளால் இந்திய இளையர்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பை இந்தப் போராட்டம் வெளிப்படுத்தி வருகிறது.

