ராஞ்சி: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலக் கலால்துறை காவலர் தேர்விற்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பில் அத்தேர்வை எழுதிய 159 பேர் உட்பட 164 பேர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) கைதுசெய்யப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்ற ஐவரும் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.
ஜார்க்கண்ட் கலால்துறை காவலர் பணி போட்டித் தேர்வு தொடர்பில் முறைகேடு செய்ததற்காக அந்த 164 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ராஞ்சியில் உள்ள ஒரு கட்டடத்தில் அவர்கள் அனைவரும் கூடியிருந்தது தொடர்பில் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. காவல்துறை உடனே அங்கு விரைந்து அவர்கள் அனைவரையும் பிடித்ததாக ஜார்க்கண்ட் மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
“அந்த மாணவர்களுக்கு நான்கு வினாத்தாள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அவை ஜார்க்கண்ட் கலால்துறை காவலர் பணித் தேர்விற்கானது எனக் கூறப்பட்டது. அச்சுப்படியாகவும் மின்னிலக்க முறையிலும் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயினும், ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டித் தேர்வின்போது வழங்கப்பட்ட வினாத்தாளும் பறிமுதல் செய்யப்பட்ட வினாத்தாள்களும் ஒத்துப்போகவில்லை,” என்று திரு குமார் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
ரூ.15 லட்சம்வரை வசூல்
விசாரணையில், அத்தேர்வர்கள் அனைவரையும் போட்டித் தேர்வு மோசடிக் கும்பல் அவ்விடத்திற்கு வரவழைத்தது தெரியவந்தது. வினாத்தாளையும் விடைகளையும் வழங்க ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டது.
“காவல்துறையிடம் பிடிபடாமல் இருக்க தேர்வர்கள் அனைவரும் தங்கள் கைப்பேசிகளையும் தேர்வு அனுமதி அட்டைகளையும் அக்கும்பலிடம் கொடுத்திருந்தனர். சிலர் அக்கும்பலைச் சேர்ந்தோர் பெயரில் வங்கிக் காசோலைகளையும் வழங்கியிருந்தனர்,” என்று காவல்துறை அறிக்கை தெரிவித்தது.
இவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளி ‘சால்வர் வினாத்தாள் கசிவு’ கும்பலின் உறுப்பினர் என்றும் கூறப்பட்டது.

