கலால் வரி உயர்வு: பிப்ரவரி முதல் ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாயாகக்கூடும்

2 mins read
0843c152-0d06-4914-b5d3-88102f32b359
சிகரெட் விலை உயர்வதைச் சிலர் வரவேற்றுள்ள நிலையில், வேறுசிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சு புகையிலைக்கான கூடுதல் கலால் வரியை பிப்ரவரி 1 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

கலால் வரி உயர்வுக்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

கலால் வரி உயர்வினால் அதிகம் பாதிக்கப்படுவது பான் மசாலா மற்றும் சிகரெட். இவை இரண்டுக்கும் தலா 40 விழுக்காடு கலால் வரி உயர்த்தப்படுகிறது.

அந்த உயர்வு காரணமாக தற்போது 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை நான்கு மடங்கு உயர்ந்து 72 ரூபாயாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், கலால் திருத்த மசோதா - 2025ஐ மத்திய அரசு நிறைவேற்றியது.

சிகரெட், சுருட்டு, ஹூக்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீதான வரிகளை அதிகரிப்பதே அந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கம்.

தற்போதைய சட்டத்தின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு 200 ரூபாய் முதல் 735 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் புதிய கலால் வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்தில் 1,000 சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை பன்மடங்கு உயரும்.

அதேபோல, மெல்லும் புகையிலை மீதான வரி 25 விழுக்காட்டில் இருந்து 100 விழுக்காடு; ஹூக்கா புகையிலை மற்றும் சிகரெட் வரி 25 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடு; பைப் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகைக் கலவைகள் மீதான வரி 60 விழுக்காட்டில் இருந்து 325 விழுக்காடாக அதிகரிக்க உள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து வெவ்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதிக விலை, புகைப்பழக்கத்தைக் கைவிட உதவும் என ஒரு தரப்பினரும் சட்டவிரோத சிகரெட் புழக்கம் அதிகரிக்கும் என, மற்றொரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்