புதுடெல்லி: அபுதாபியில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் திங்கட்கிழமை (மார்ச் 3) தெரிவித்துள்ளது.
ஷஸாடி கான் எனும் அந்தப் பெண்ணுக்கு வயது 33.
இல்லப் பணிப்பெண்ணான அவர் தனது முதலாளியின் நான்கு மாதக் குழந்தையைக் கொன்றதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் சட்ட, விதிமுறைகளுக்கு ஏற்ப, பிப்ரவரி 15ஆம் தேதி அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அமைச்சு நீதிமன்றத்திடம் தெரிவித்தது.
கானின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தகவல் பெற்றதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கான இந்தியத் தூதரகம் கூறியது.
அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றனர் என்றும் அப்பெண்ணின் இறுதிச்சடங்கு மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
திருவாட்டி கானின் தந்தை, தனது மகளைப் பற்றிய தகவல் கேட்டு நீதிமன்றத்தை நாடிய பிறகு இத்தகவல் வெளியாகியுள்ளது.