புதுடெல்லி: விரைவுணவு விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவற்றை நிரப்பி விற்பனை செய்யப்படும் உறைகளில் எச்சரிக்கை அறிவிப்பு உள்ள ‘லேபிள்’ சேர்க்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவர்கள் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
விரைவுணவுகளின் சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் முதன்மைக் கோரிக்கையாகும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்தியாவின் முன்னணிச் சுகாதார நிபுணர்கள் சிலர் பொது அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அனைத்து இந்திய ஊடகத்தளங்களிலும் காலை 6 முதல் இரவு 11 மணி வரை இடம்பெறக்கூடிய விரைவுணவு சார்ந்த, நொறுக்குத்தீனிகளைக் குறித்த விளம்பரங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகமுள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விளம்பரங்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என மேற்குறிப்பிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உணவுப்பொருள்கள் உள்ள பொட்டலங்களின் முன் பக்கத்தில் எச்சரிக்கை ‘லேபிள்’கள் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
எச்சரிக்கை ‘லேபிள்’கள் தொடர்பான பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துள்ள நிலையில், சுகாதார நிபுணர்களின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு அடங்கிய உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை வரையறுக்க வேண்டும் என நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்களின் கருத்துகள், கேலிச்சித்திர கதாபாத்திரங்கள், குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்களைக் கொண்டு அந்த உணவுகளைச் சந்தைப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் இந்திய அரசுக்கு பரிந்துரைத்தனர்.
மேலும், ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்பன போன்ற விலை அடிப்படையிலான சலுகைகளைத் தடை செய்யவும் ஆரோக்கியமற்ற உணவு நிறுவனங்கள், விளையாட்டு, பள்ளி நடவடிக்கைகளுக்கு வழங்கும் நிதியுதவியை முடிவுக்குக் கொண்டுவரவும் நிபுணர்கள் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
சௌமியா சுவாமிநாதன், ஸ்ரீநாத் ரெட்டி, ரன்தீப் குலேரியா உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் இணைந்து, இந்திய சுகாதார மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர்களுக்கு அவசர கடிதத்துடன் கூடிய அறிக்கையை அனுப்பியுள்ளனர்.
புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் விளம்பரங்களே குழந்தைகள் தவறான உணவுப் பழக்கத்திற்கு அடிமையாக முக்கியக் காரணம் என மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியத் தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மூன்று பெண்களில் ஒருவரும், நான்கு ஆண்களில் ஒருவரும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
நீரிழிவு, இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்களின் தாக்குதலில் இருந்து இளைய தலைமுறையைக் காக்க, அரசு உடனடியாக இந்த விளம்பரத் தடையை அமல்படுத்த வேண்டும் எனச் சுகாதார நிபுணர்கள் மேலும் வலியுறுத்தி உள்ளனர்.


